சென்னையில் அமையும் அமெரிக்க விமான உதிரி பாக நிறுவனம்!
அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் மையம் சென்னையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை மிஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குறு, சிறு தொழில்துறை சார்பில் மாவட்டங்கள் தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை தற்போது தமிழ்நாடு தொழில்துறை செய்து வருகிறது. அந்த வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், தனது Global capacity center-ஐ சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவில் அமையும் முதல் மையம் இதுவாகும்.
சென்னையில் போயிங் நிறுவனத்தின் மையம்:
இதனைத்தொடர்ந்து அமெரிக்க நாட்டில் உள்ள முன்னணி விமான உதிரி பாகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான போயிங் நிறுவனத்தின் மையம் சென்னையில் அமைகிறது. நாளை மறுநாள் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகவும், இந்த நிறுவனத்தை விரைவில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.