உலகப் பட்டினி தினம் - ஏழை, எளியோருக்கு உணவு வழங்கிய தவெகவினர்!
உலக பட்டினி தினத்தையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மக்களுக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும் உலகப் பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க கட்சி நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதன்பேரின் தமிழ்நாட்டின் பல இடங்களில் தவெக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் அன்னதான விழாவை நடத்தினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தவெக சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெஜிடபுள் பிரியாணி, தயிர் சாதம், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை மக்களுக்கு வழங்கினர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட
திருசூலம் பகுதியில் தவெக சார்பில் நடந்த சம்பந்தி விருந்தினை மேற்கு மாவட்ட
செயலாளர் மின்னல் குமார் தொடங்கி வைத்தார். சுமார் 1,000 பேருக்கு அறுசுவை
உணவு வழங்கப்பட்டது.
அதேபோல் பழைய பெருங்களத்தூரில் தவெக வர்த்தக அணி சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்ட முழுவதும் மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இளைஞரணி என 10க்கும் மேற்பட்ட இடங்களில் 10,000 ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.
சென்னை
சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, கண்ணகிநகர், பள்ளிகரணை, மேடவாக்கம் உள்ளிட்ட 16-இடங்களில் 5000-க்கும் மேற்பட்டோருக்கு சைவம் மற்றும் அசைவம் சாம்பார் சாதம், தயிர்சாதம், பிரியாணி ஆகியவைகள் தயார் செய்து ஏழை, எளிய மக்கள் வசிக்ககூடிய பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட காப்பகங்களில் இன்று
3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலன் தலைமையில் திருவாடானை தொகுதி பாரதி நகர் பேருந்து நிலையத்தில் சுமார் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிவிடு முருகன் கோயில், சின்னக்கடை தெரு, மேற்கு
சின்னக்கடை தெரு, கிழக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மற்றும் பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி
பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாணவரணி தலைமை சார்பில் ராமநாதபுரத்தின் பல பகுதிகளில் ஏராளமானவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பரமக்குடி சந்தைக்கடை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் சாப்பிட்டனர். இதுபோல தமிழ்நாட்டின் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி
தமிழ்நாடு மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் உள்ள 5 தொகுதிகள், மாஹே மற்றும் ஏனாம் என 30-தொகுதிகளிலும் 20-ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.