விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது - 11 போட்டிகளில் 765 ரன்கள் அடித்து அசத்தல்!!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடர் நாயகன் விருது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடம் தோற்று நழுவ விட்டது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றது.
எனினும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடர் நாயகன் விருது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. 11 போட்டிகளில் விளையாடிய அவர் 3 சதங்கள் விளாசி மொத்தம் 765 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சிறப்பாக விளையாடிய அவருக்கு தொடர் நாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.