உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் - டிராவில் முடிந்த 13வது சுற்று!
இந்திய இளம் வீரர் குகேஷுக்கும், நடப்பு சாம்பியன் டிங் லிரேனுகும் (சீனா) இடையிலான ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.
இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் முதலில் யார் 7.5 புள்ளிகளை எடுக்கிறார்களோ அவரே உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.
இதுவரை 12 சுற்றுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 13வது சுற்று நடைபெற்றது. இந்த சுற்றும் டிராவில் முடிந்தது. இன்னும் ஒரேயொரு சுற்று மட்டுமே உள்ள நிலையில் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலை பெற்றுள்ளனர். நாளை (டிச. 12) நடைபெறும் இறுதிச்சுற்றில் வெற்றிப் பெறுபவரே சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.