தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பணிகள் தொடக்கம்!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, மறுபக்கம் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார். அதனைதொடர்ந்து மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி பகுதியில் கடந்த 16ஆம் தேதி காலை 7 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் மாநாட்டிற்காக பூமி பூஜை பந்தக்கால் நடப்பட்டது.
இதற்கு காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி சில நாட்களுக்கு முன்பு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சந்தித்து மனு அளித்தார். தவெக இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் 35 நாட்கள் உள்ளன அதற்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளது. இதற்காக 506 ஏக்கர் பரப்பளவில் நாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்டு தற்போது மேடை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.