"வார்த்தைகள் கத்தி மாதிரி, குத்தி கிழித்துவிடும்" - விஜய்சேதுபதி!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யாமேனன் நடித்துள்ள திரைப்படம் "தலைவன் தலைவி". இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதையொட்டி விஜய்சேதுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனக்கும் பாண்டிராஜ்க்கும் ஒரு கட்டத்தில் நல்ல நட்பு இருந்தது. அவருக்கு தேசியவிருது அறிவித்தபோது நான் அவர் அருகில் இருந்தேன். அவருக்கு வந்த மெசேஜ் படித்து காண்பித்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் என்னை வைத்து அவரும், அவரிடம் நானும் படம் பண்ணக்கூடாது என்று பிரிந்துவிட்டோம். கடைசியில் மிஷ்கின் பிறந்தநாள் பார்ட்டியில் மீண்டும் இணைந்தோம்.
கணவன், மனைவி உறவை, அதன் சிக்கலை இந்த படம் பேசுகிறது. நித்யாமேனன் நடித்த ஒரு மலையாள படத்தில் நான் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறேன். அப்போது இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பேசினோம். இப்போது நடந்து இருக்கிறது. அவரை தவிர அந்த பேரரசி கேரக்டரில் வேறு யாரும் நடித்து இருக்க முடியாது. படத்தில் ஒரு குழந்தையும் சிறப்பாக நடித்து இருக்கிறாள். இன்றைய காலகட்டத்தில் டைவர்ஸ் அதிகரித்துள்ளது. இந்த படம் பார்த்தால் டைவர்ஸ் தேவையா? அதற்கு அவசரப்படக்கூடாது என்று யோசிப்பார்கள்.
இந்த படத்துக்கு என் வீடு, நித்யாவீடு, ஓட்டல் என 3 செட் போட்டார்கள். அதை பிரிக்கும்போது பலர் மனசு கஷ்டப்பட்டது. அந்த அளவுக்கு படத்துடன் இணைந்துவிட்டோம். வேறு படத்திற்காக மதுரை சென்றபோது கூட இந்த படத்துக்கு சென்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது ட்ரோல் பண்ணுவது அதிகமாகிறது. அதை தடுக்க முடியாது. அன்றைக்கு கார்டூன் போன்ற விஷயங்கள் இருந்தது. நாமும் பல வகைகளில் கிண்டல் அடித்து இருப்போம். ஒரு படைப்பை பொது வெளியில் கொடுத்தபின் விமர்சனங்களை மறுக்க முடியாது.
நம்மிடம் குறைகள் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். மகாராஜா படம் சீனாவரை சென்றது சந்தோஷம். ஆனாலும் நம் மண் சார்ந்த படங்களைதான் நேசிக்கிறேன். ஒரு பீகார்காரர் கருப்பன் படத்தை போனில் பார்த்து ரசிப்பதை மிரண்டுபோனேன். நம் மண் சார்ந்த படைப்புகளை மற்றவர்கள் ரசிக்கிறார்கள். நம் லோக்கல்தான், மற்றவர்களுக்கு பாரின் என்று இயக்குனர் குமாரராஜா சொல்வார்.
விக்ரம்வேதாவில் பரோட்டா எப்படி சாப்பிடணும்னு சொல்லி இருப்பேன். தர்மதுரையில் பரோட்டா கெடுதல் பற்றி டாக்டராக பேசியிருக்கிறேன். இந்த படத்தில் பரோட்டோ மாஸ்டராக வருகிறேன். எத்தனை வீடியோக்கள் வந்தாலும், சாப்பிடு விஷயத்தில் விழிப்புணர்வு வர வேண்டும். அறிவு சார்ந்து, அக்கறை சார்ந்து சாப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். அது நம் கையில்தான் இருக்கிறது.
இன்றைக்கு உணவு முறை மாறிவிட்டது. ஓட்டல்கள் பெருகிவிட்டன. ஆனாலும், நாம் என்ன சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் வாழ்க்கையில் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும். வார்த்தை கத்தி மாதிரி, குத்தி கிழித்துவிடும். தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.