மகளிர் உலகக்கோப்பை | இலங்கை - நியூசிலாந்து ஆட்டம் ரத்து!
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விஷ்மி குணரத்ன 42 ரன்களிலும், சாமரி அத்தபத்து 53 ரன்களிலும் வெளியேறினர். அடுத்ததாக வந்த ஹர்ஷிதா சமரவிக்ரம 26 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இலங்கை அணி 50 ஒவரில் 6 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 55 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அப்போது, அங்கு திடீரென மழை கொட்டியது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மழை நின்றபின் ஆட்டத்தை தொடங்க இருந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால், ஆட்டம் ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.