மகளிர் உலகக்கோப்பை | இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நேற்று (அக்.12) நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் 48.5 ஓவரில் இந்திய அணி 330 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 80 ரன்களும், பிரதிகா 75 ரன்களும் கைப்பற்றினர். ஆஸ்திரேலியா சார்பில் அனபெல் சுதர்லாந்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர்.
இதில் போப் லிட்ச்பீல்ட் 40 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய அலிசா 142 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய ஆஷ்லி கார்ட்னர் 45 ரன்களும், தாலியா மெக்ராத் 12 ரன்களும் எடுத்தனர். எலிஸ் பெர்ரி 47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.