மகளிர் டி20 உலகக் கோப்பை- முதல்முறையாக நியூசிலாந்து மகளிர் அணி சாம்பியன்!
மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது
தென்னாபிரிக்க (South Africa) மகளிர் அணிக்கு எதிராக இன்று (20) டுபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியிலேயே அந்த அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சுசி பேட்ஸ்(32), அமெலியா கெர்(43) மற்றும் ப்ரூக் ஹாலிடே(38) என சீரான ஓட்டங்களை குவித்தனர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் லாரா வால்வார்ட் 27 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார். ஆனால் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ஓட்டங்களை பெற்ற நிலையில், தோல்வியடைந்தது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அமெலியா கெர் மற்றும் ரோஸ்மேரி மெய்ர் தலா 3 விக்கெட்டுகளை பறித்து அசத்தினர். இதன்படி நியூசிலாந்து மகளிர் அணி முதல்முறையாக உலக கிண்ணம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
9-வது மகளிர் ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3ஆம் திகதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), மேற்கிந்திய தீவுகள், தென்ஆபிரிக்கா (பி பிரிவு) தங்கள் பிரிவில் முறையே முதலிரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.இதனை தொடர்ந்து 2வது அரை இறுதியில் வென்று நியூசிலாந்து மற்றும் தென்ஆபிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் சென்றன. நியூசிலாந்து மகளிர் அணி 3 வது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.