மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை : சீனாவை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது.
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான் அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த தொடரின் அரையிறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் சீனா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3வது முறையாக இறுதி சுற்றை எட்டியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
இதனையடுத்து இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீனாவின் மகளிரணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி 3 ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. மேலும் அதிக முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய (3 முறை) அணியின் சாதனையையும் இந்திய மகளிர் அணி சமன் செய்தது.
இந்திய மகளிர் அணி தங்கம் வென்ற நிலையில், சீன மகளிருக்கு வெள்ளிப் பதக்கமும், ஜப்பான் மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.