மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை : ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது #India!
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் தொடர் ஐந்து வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. முதல் 3 ஆட்டங்களில் முறையே மலேசியா, தென் கொரியா மற்றும் தாய்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா நான்காவதாக சீன அணியை எதிர்கொண்டது. சீனாவிற்கு எதிரான போட்டியிலும் இந்தியா வெற்றிப் பெற்றது. இதனைத்தொடர்ந்து ஐந்தாவதாக இன்று ஜப்பானுடன் பலப்பரீட்சை செய்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் மீண்டும் ஜப்பானை எதிர்கொள்கிறது.