மகளிர் ஆசியக் கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
9வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். முதல் நாளான நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தாஸ் அணியினர் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்னில் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக சிட்ரா அமின் 25 ரன்களும், துபா ஹசன், பாத்திமா சனா தலா 22 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங், பூஜா வஸ்ட்ராகர், ஸ்ரேயங்கா பட்டீல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மாவும், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும் களமிறங்கினர்.
மந்தனா 45 ரன்களிலும், ஷபாலி வர்மா 40 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த ஹேமலதா 14 ரன்களில் அவுட் ஆனார். இந்திய அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்குகள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5 ரன்களுடனும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.