கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. வழக்கத்தை காட்டிலும் பயன்படுத்தப்பட்ட கார்களை பெண்கள் வாங்குவது எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!
இந்தியா உலக அளவில் மிக பெரிய கார் சந்தைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. புதிய கார்களுக்கு இணையாக, மற்றவர்கள் பயன்படுத்திய கார்களும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்கள் சார்ந்த வணிகங்களும் கோடிக் கணக்கிலான ரூபாய்களில் நடைபெறுகின்றன.
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்கள் வணிகத்தில் முன்னிலையில் இருக்கும் கார்ப்பிரேட் நிறுவனம் என்றால், அது ஸ்பின்னி ஆகும். மேலும், பயன்படுத்தபட்ட கார்களை வாங்க மற்றும் விற்க இந்தியாவின் முன்னணி இணைய தளம் ஸ்பின்னி ஆகும். 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஸ்பின்னி நிறுவனத்தின் பயன்படுத்தபட்ட கார்கள் விற்பனை 31% ஆக அதிகரித்துள்ளது. இது, 2023ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களை காட்டிலும், ஸ்பின்னி நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட கார்களின் வணிகம் 31% வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஸ்பின்னி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் :
"நாட்டில் 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பயன்படுத்தபட்ட கார்கள் விற்பனை 31% ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில், பயன்படுத்தப்பட்ட கார் வாங்கிய வாடிக்கையாளர்களில் 35% பெண்களாக இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 46% பெண் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியது கார்கள் மார்க்கெட்டில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகப்பட்சமாக தலைநகர் டெல்லியில் அதிக பெண்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளனர். குறிப்பாக, டெல்லியில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியவர்களின் பெண்கள் எண்ணிக்கை 48% ஆக உள்ளது. டெல்லிக்கு அடுத்து இடத்தில், பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியவர்களில் மும்பை 46% பெண் வாடிக்கையாளர்களுடன் 2வது இடம், பெங்களூர் 41% 3வது இடத்திலும், புனே 39% 4வது இடத்திலும் உள்ளது. கேரளா மாநிலம், கொச்சியிலும் பெண்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். லக்னோ, ஜெய்பூர் போன்ற மெட்ரோ-அல்லாத நகரங்களில் கூட பெண் கஸ்டமர்களின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளது"
இவ்வாறு ஸ்பின்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பின்னி இணையத்தள மூலமாக பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் 30 - 40 வயதான பெண்கள் பரவலாக தேர்வு செய்யும் கார்களாக ரெனால்ட் க்விட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி சுஸுகி பலேனோ கார்களாக உள்ளது குறிப்பட்டதக்கது.