பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி | இறுதிப்போட்டியில் இந்தியா - சீனா இன்று மோதல்!
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதுகின்றன.
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் சீனா 3 -1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது முறையாக இறுதி சுற்றை எட்டியது. மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.
இதையும் படியுங்கள் : புரோ கபடி லீக் போட்டி | தபாங் டெல்லி – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்!
இந்நிலையில், இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. மாலை 4.45 மணிக்கு நடைபெற உள்ள இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 6-வது இடத்தில் இருக்கும் சீனாவுடன் மோத உள்ளது.