பெண்ணின் பொய் புகார்! ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்! #UP நீதிமன்ற உத்தரவால் வெடித்த சர்ச்சை!
பொய்யான குற்றச்சாட்டால் ஒரு வருடத்திற்கும் மேலாக இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த குற்றச்சாட்டை சுமத்திய பெண்ணுக்கு வெறும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 35 வயதான திருமணமான பெண் ஒருவர், இரண்டு இளைஞர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவரும் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், புகாரளித்த பெண் அந்த இளைஞர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது தெளிவானது.
இதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய அந்த பெண்ணுக்கு ரூ.1,000 அபராதம் விதித்து கூடுதல் நீதிமன்ற நீதிபதி ரவி திவாகர் உத்தரவிட்டார். அந்த 1000 ரூபயை பிரித்து இளைஞர்கள் இருவருக்கும் தலா ரூ.500 நிவாரணத் தொகையாக வழங்கிட உத்தரவிடப்பட்டது. மேலும், அந்த இளைஞர்களை விடுதலை செய்தும் உத்தரவிடப்பட்டது.
அதனுடன், முறையாக விசாரணை நடத்தாமல் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பஹேதி காவல்துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரேலி எஸ்எஸ்பி-க்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்ததற்கு நிவாரணமாக வெறும் ரூ.500 வழங்கினால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.