ஹைதராபாத்தில் #Momos சாப்பிட்டு பெண் உயிரிழப்பு... 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹைதராபாத் நந்தி நகர், சிங்காடகுண்டா, கவுரிசங்கர் காலனி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு விற்கப்பட்ட மோமோஸை பலர் விரும்பி சாப்பிட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவருக்கும் அன்று மாலை வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. 20-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் நிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிங்காட குண்டா பகுதியை சேர்ந்த ரேஷ்மா பேகம் (31) என்ற பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து மோமோஸ் விற்ற 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், மோமோஸுடன் வழங்கப்பட்ட மையோனீஸ் மற்றும் பச்சை மிளகாய் சட்னியால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
மிகவும் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமையல் செய்யப்பட்டுள்ளது. மோமோஸ் தயாரிப்பு மாவு, அப்படியே குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு எந்த பேக்கும் செய்யப்படவில்லை. அதன் அருகே திறந்தநிலையில் குப்பைத்தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. அங்கே தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.