“அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா இல்லை!” - எலான் மஸ்கால் இப்படி பாராட்டப்பட்டவர் எந்த ஊர் தெரியுமா?
எலான் மஸ்கால் பாராட்டப்பட்ட அசோக் எல்லுசாமி யார்? முழு விவரம் இதோ!
உலகெங்கும் உள்ள பல சர்வதேச நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் கோலோச்சிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் சாதனைகள் அவ்வப்போது பேசுபொருளாகி ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைப்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக இப்போது, அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா இல்லை என எலான் மஸ்க் கூறியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
உடனே நம் அனைவர் மனதிலும் எழும் முதல் கேள்வி... யார் இந்த அசோக் எல்லுசாமி... தமிழ் பெயர் மாதிரி இருக்கே... எந்த ஊர் காரரா இருப்பார்? அப்டீங்கரதுதான்...
ஆமாங்க... உங்க கேள்வி நியாயமானது தான்... எலான் மஸ்கால் பாராட்டப்பட்ட அந்த நபர் தமிழர்தான்... நம்ம சென்னையில் பிறந்து சென்னையிலேயே படித்தவர்தான்...
இந்நிலையில... எலான் மஸ்க் கொண்டாடும் அளவுக்கு நம்ம அசோக் எல்லுசாமி என்ன செய்தார்... யார் இந்த அசோக் எல்லுசாமி இங்கே பார்ப்போம்....
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம், ஓபன் ஏஐ, நியூரோலிங்க், தி போரிங் ஆகிய நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான், எலானுக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது.
இப்படி உலகமே உற்று நோக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் குழுவின் தலைவராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசாமி பதவி வகிக்கிறார்.
சென்னையில் பிறந்த அவர், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் (2005-2009) மின்னணு, தகவல்தொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். இதனை அடுத்து அமெரிக்காவுக்கு சென்ற அவர், கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் (2012-2013) ரோபோடிக் சிஸ்டம்ஸ் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார்.
படிப்பை முடித்துவிட்டு முதலில் வோல்ஸ்வேகன் கார் நிறுவனத்தில் பணியாற்றிய அசோக் எல்லுசாமி கடந்த 2014-ம் ஆண்டில் எலக் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனத்தில் இணைந்தார். கடந்த 2022-ம் ஆண்டில் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத காரை தயாரிக்க சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவராக அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான குழுவின் அயராத உழைப்பின் பலனாக வரும் ஆகஸ்ட் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்காவில் அறிமுகமாக உள்ளது.
அசோக் எல்லுசாமிக்கு நன்றி. டெஸ்லா ஏஐ/ஆட்டோபைலட் குழுவில் முதல் நபராக அவர் இணைந்தார். அதன்பிறகு அந்த குழுவின் தலைவராக உயர்ந்தார். அவரும்அவரது குழுவும் இல்லையென்றால் டெஸ்லா இல்லை.
அவர் இல்லையென்றால் டெஸ்லா சாதாரண கார் உற்பத்தி நிறுவனமாக பத்தோடு பதினொன்றாக மட்டுமே இருந்திருக்கும். தானியங்கி காருக்கான தொழில்நுட்பத்துக்காக தேடி அலைந்து கொண்டு இருந்திருப்போம். ஆனால் அத்தகைய நவீன தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனம் வெறு எங்கும் இப்போதைக்கு இல்லை. இவ்வாறு எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இப்படி உலகமே உற்றுநோக்கும் ஒரு படைப்பின் மூளையாக ஒரு தமிழர் திகழ்ந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையை தருவதோடு... நமக்குள் இருக்கும் ஏராளமான அசோக் எல்லுசாமிகளை அடையாளம் காண வேண்டியிருக்கிறது எனவும் நினைவூட்டுகிறது அல்லவா...