“இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன்” - ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.
20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் முதல் முறையாக இறுதிபோட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகால கனவை நினைவாக்கியது இந்தியா. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போதுதான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது
“இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பது போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். மற்ற வடிவங்களிலும் அதைத் தொடர்ந்து செய்வேன்.
டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு. அது நனவானது. எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம் இது . நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.