மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது!
மாலத்தீவு அதிபருக்கு சூன்யம் வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், மாலத்தீவு அமைச்சர்கள் இரண்டு பேர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி மாலத்தீவின் அமைச்சர்கள் பாத்திமத் ஷம்னாஸ் அலி சலீம், ஆதம் ரமீஸ் ஆலி ஆகியோரை மாலத்தீவு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது அதிபருக்கு சூனியம் வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாத்திமத் ஷம்னாஸ் மாலத்தீவின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்து வந்தார்.
பில்லி-சூனியம் தொடர்பான சில நடவடிக்கைகள் அதிபர் அலுவலகத்தில் காணப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த விதமான தடயங்களை அடிப்படையாக வைத்து சூனியம் வைக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது.
முன்னதாக, மாலேவின் மேயராக மொகம்மது மூயிஸ் பதவி வகித்தபோது, பாத்திமத் ஷம்னாஸ் உடன் பணியாற்றியிருக்கிறார். பிறகு, மொகம்மது மூயிஸ் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபரான போது பாத்திமத் ஷம்னாஸ், சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இதையும் படியுங்கள் : யுஜிசி நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு - புதிய அட்டவணை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை..!
மேலும், மொகம்மது மூயிஸ்-க்கு நெருங்கிய உதவியாளராக ஆதம் ரமீஷ் இருந்து வந்துள்ளார். ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக, மொகம்மது பங்கேற்ற பொது நிகழ்ச்சிகள் எதிலும் ஆதம் பங்கேற்காமல் இருந்தது, அரசியல் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் கைதாகி உள்ளனர்.