மல்லிகார்ஜுன கார்கே முழுமையாக குணமடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருதய பிரச்சனைகள் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்கேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இருதய துடிப்பு சீரான நிலையில் இல்லாததால் பேஸ்மேக்கர் பொருத்த முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை மூலமாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கார்கேவின் மகனும், கர்நாடக மாநில மந்திரியுமான பிரியங்க் கார்கே, ”அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கார்கே நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் கார்கே, பூரண குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் முழுமையாக குணமடைய எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும், தனது பணிகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன்”
என்று தெரிவித்துள்ளார்.