நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளும், கோரிக்கைகளும்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்றைய நிகழ்வில் திமுக எம்பிக்கள் சில கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“விவசாயிகள் கடனில் தத்தளிக்கையில் கார்ப்பரேட்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் விவசாய விரோத ஒன்றிய அரசு! - தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் காட்டம்!
வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024இல் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தென்காசி தொகுதி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் மக்களவையில் ஆற்றிய உரை:
மக்களவையில் ஒன்றிய அரசு அளித்த பதில்களின் படி, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ. 16.26 லட்சம் கோடி வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் ரூ.7.4 லட்சம் கோடி. பொதுத்துறை வங்கிகளின் வருடாந்திர தள்ளுபடிகள் 2013ல் ஆண்டுக்கு ரூ.7,187 கோடியில் இருந்து 2023ல் சுமார் 1.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வங்கிகள் கடன் தள்ளுபடி செய்வது வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று கூறி அரசாங்கம் தள்ளுபடியை நியாயப்படுத்தியது.
எந்தவொரு வங்கியின் மொத்தக் கடனில் ஆறு சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், அதேசமயம் பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் குறிப்பாக தனியார் வங்கிகள் இந்த விதியை முழுமையாகப் பின்பற்றவில்லை. இது தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிரான பாரபட்சம் இல்லையா? விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.7.4 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்ய தயங்காத இந்த அரசு, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்து வருவது இந்த ஒன்றிய அரசு எப்போதும் விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கிட்டதட்ட 35.85 லட்சம் கோடி வட்டியில்லா கடன் விவசாயிகளுக்காக 2021 மே முதல் டிசம்பர் 2023 வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியில்லாக் கடன்களை தமிழ் நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதை நினைவூட்டுகிறேன்.
கல்விக் கடனை நலத் திட்டமாகக் கருதி, கல்விக் கடனுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் வேலை கிடைப்பதற்கு முன் கடனை திருப்பிக் கேட்ககூடாது எனும் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். மாணவர்களின் நலனுக்காக கல்விக் கடன் வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
குடிமக்கள் தங்கள் சொந்தக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை அவர்கள் உயர்த்தியுள்ளனர். எஸ்எம்எஸ்களுக்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு ஏன் தண்டக் கட்டணம் செலுத்த வேண்டும்? டிஜிட்டல் மயமாக்கல் அதிகரிப்பால், பல பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆர்டிஐ பதிலில், சைபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2023 நிதியாண்டில் 75,800 வழக்குகளில் இருந்து 2024 நிதியாண்டில் 2,92,000 வழக்குகளாக அதிகரித்துள்ளது என்றும், சுமார் 2024ஆம் நிதியாண்டில் மட்டும் இதுவரை இணைய மோசடிகளால் 2,056 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
ஆன்லைன் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவது மூத்த குடிமக்கள்தான். மோசடி செய்பவர்கள் குறிப்பாக வயதானவர்களை குறிவைப்பதாக பல வழக்குகள் உள்ளன. சைபர் மோசடிகளில் இருந்து முதியவர்களை பாதுகாக்க சிறந்த இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில், ஏடிஎம்கள் வங்கிகளுக்குள் அமைந்துள்ளன. எனவே, மாலை 6 மணிக்கு வங்கி மூடப்பட்டால், மக்கள் ஏடிஎம் வசதியையும் இழக்கின்றனர். இது கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கடுமையான சிக்கல்களை உருவாக்குகிறது.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் எத்தனை? - மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி!
பிரதமரின் அனைவருக்கும் வீடு(PMAY-U ) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, அவற்றிகு ஒதுக்கப்பட்ட நிதி போன்ற விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கேட்டுள்ளார். தற்போது நிலுவையில் உள்ள கட்டுமானங்களை முடிக்க அரசு நிர்ணயித்திருக்கும் காலக்கெடு மற்றும் பெரும்பாலும் அதிக பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் கிராமப்புறங்களில் குறைவான நிதி வழங்குவதற்கான காரணங்களை வெளியிட வேண்டும்.
கனமழையில் அதிக பாதிப்புள்ளாகும் பகுதிகளில் பேரிடர்களை தாங்கும் வீடுகளை கட்டுவதற்காக கூடுதல் நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வீட்டுகளின் தரத்தை உறுதிசெய்வதற்கான வழிமுறைகளையும் வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தொடரும் இந்தியர்களின் ஆதார், பாஸ்போர்ட் டேட்டா திருட்டு - திமுக எம்.பி. பி. வில்சன் குற்றச்சாட்டு!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) இருந்து 81.5 கோடி இந்தியர்களின் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் உட்பட தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் எனப்படும் ரகசிய இணையதளத்திற்கு விற்கப்படுகிறது என அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனம் குற்றம்சாட்டி இருக்கின்றது. ஒன்றிய அரசு இக்குற்றச்சாட்டிற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான மொத்த தரவு கசிவுகளின் விவரங்களையும் வெளியிட வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேட்டுள்ளார்.
- நீதித்துறை நடவடிக்கைகளை மொழிபெயர்க்க AIஐ பயன்படுத்த கோரிக்கை! - தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்!
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகளை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மொழிபெயர்த்து அவற்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவை வெளியிட வேண்டும், மொழிப்பெயர்ப்புத்துறையில் புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்கள் SC/ST/OBC மற்றும் சிறுபான்மை சமூகங்களின் இடஒதுக்கீட்டுமுறையில் நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை மக்களவையில் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வைத்துள்ளார்.
- ஜவுளித்துறையின் கச்சா பொருட்களின் விலையை குறைத்திடுக! - திமுக எம்.பி. பி.வில்சன் கோரிக்கை!
இந்திய ஜவுளித்துறை 2030ஆம் ஆண்டுக்குள் 350 பில்லியன் டாலர் எனும் இலக்கை அடைய மலிவான விலையில் கச்சா பொருட்கள் கிடைத்திட ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என ஒன்றிய அரசிடம் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கோரியுள்ளார்.
பருத்திக் கழிவுகள் உட்பட அனைத்து வகையான பருத்தி இறக்குமதி மீதான வரிகளை அரசு நீக்கிடவேண்டும், ஜவுளித்துறைக்கான மூலப்பொருட்கள் எல்லோருக்கும் மலிவு விலையில் எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு பருத்தி விதை வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பருத்தி உற்பத்தித்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.