தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்யும் வின்ஃபாஸ்டு நிறுவனம் - நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், ரூ.16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 7, 8) நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. இதன் மூலம் சுமார் 3,000 - 3,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் 2024-ல் தொடங்கும் என்றும் ஆண்டுக்கு 1,50,000 மின்சார வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.… https://t.co/iGFj5PnaFI pic.twitter.com/aHcVOiUett
— M.K.Stalin (@mkstalin) January 6, 2024
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மின்சார கார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல.
தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல். தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் இந்நிறுவனத்தாருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்! உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.