“தலித் மக்கள்மீது வன்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதையாவது ஒப்புக் கொள்வீர்களா?” - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ரஞ்சித் கேள்வி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பிறகு ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் வீடியோவையும் இன்று காலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை குறிப்பிட்டு, “தமிழ்நாட்டில் நடக்கும் சாதியரீதியிலான வன்கொடுமைகளை அறிவீர்களா?" என இயக்குநர் பா.ரஞ்சித் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
“தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதிய ரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதைவிட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!” என பதிவிட்டுள்ளார்.