75% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து? மத்திய அரசு கூறுவது என்ன?
நாடாளுமன்றத்தின் மக்களவையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சியை சேர்ந்த உறுப்பினர் பவுசாஹேப் ராஜாராம் வக்சவுரே,
“மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறும் அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றவில்லை என்றாலும் அல்லது ஆட்சியில் அமர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற்றப்படாத அறிவிப்புகளை பகிரங்கப்படுத்தவில்லை என்றால் அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு ஏதேனும் முயற்சி எடுத்துள்ளதா அல்லது பரிந்துரை செய்துள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எந்த பரிந்துரையும் மத்திய அரசு வழங்கவில்லை என தெரிவித்துள்ளதோடு, நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக அவ்வபோது இந்திய தேர்தல் ஆணையத்துடன் மத்திய அரசு கலந்தலோசித்து விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.