For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா?”-அன்புமணி இராமதாஸ் கேள்வி!

அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
05:34 PM Sep 02, 2025 IST | Web Editor
அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
”அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா ” அன்புமணி இராமதாஸ் கேள்வி
Advertisement

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

Advertisement

”கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து உரைத்து வந்த நிலையில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில், விடியல் எங்கே? என்ற ஆவணத்தை  வெளியிட்டேன். அந்த ஆவணத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளை பட்டியலிட்டிருந்தேன். வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகக் கூறியிருந்த நான், அவற்றையும் அந்த நூலில் பட்டியலிட்டிருந்தேன். அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டது மட்டுமின்றி, அவற்றில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது; எந்த அளவுக்கு செயல்படுத்தப் படவில்லை என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன். அதை திமுக அரசால் மறுக்க முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை” என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்.

அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் எவ்வாறு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளாக கருத முடியும்? என்று தெரியவில்லை. செய்யாத சாதனைகளையே செய்ததாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, யாருக்கும் பயனற்ற அரசாணை பிறப்பித்திருந்தால் கூட அதைக் கொண்டாடியிருக்கும். ஆனால், அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்யவில்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும் தான் அது நிறைவேற்றப்பட்டதாக பொருள் ஆகும்.

திமுக அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்பது தான் உண்மை. அதேபோல், திமுகவால் இனி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது தான் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும். நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்; தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement