நாகை அருகே 630 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 830கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையில் கிழக்கில் இருந்து மேற்கே நகர்ந்து செல்லும் கடல் அலையால், இந்த புயல் சின்னம் மேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதேபோல், மேற்கிலிருந்து கிழக்கே வீசும் மேடன் - ஜூலியந் அலைவு (எம்ஜேஓ) என்றழைக்கப்படும் வெப்பக் காற்றால் இந்தப் புயல் சின்னத்தின் திசை மாற வாய்ப்புள்ளது. ஆகையால், புயல் சின்னத்துக்கு இருபுறத்திலிருந்து வீசப்படும் காற்றின் வேகம், அது நகர்ந்து வரும் பாதை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புயல் சின்னம் இலங்கையை நெருங்கும் போதுதான், இது புயலாக மாறுமா? என்பதை உறுதியாகக் கூற முடியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.