For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஸ்வாதி மாலிவாலின் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தது போல், குமாரின் புகார் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? அமைச்சர் அதிஷி கேள்வி!

02:15 PM May 18, 2024 IST | Web Editor
ஸ்வாதி மாலிவாலின் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தது போல்  குமாரின் புகார் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்குமா  அமைச்சர் அதிஷி கேள்வி
Advertisement

“டெல்லி காவல்துறை பாரபட்சமற்றதாக இருந்தால், மாலிவாலுக்கு எதிரான குமாரின் புகாரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்” என அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். 

Advertisement

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதியன்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ஸ்வாதி மாலிவால், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார், தன்னைத் தாக்கியதாக புகார் மனு அளித்தார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பல ஸ்வாதி மாலிவாலுக்கு ஆதரவாக பேசின.  இந்த பிரச்னை தீவிரமானதையடுத்து பிபவ் குமார் மீது போலீசார் நேற்று எப்ஐஆர் பதிவு செய்தனர். தான் தாக்கப்பட்டது குறித்து ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் விளக்கியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அதிஷி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது;

“ஸ்வாதி மாலிவால் முதலமைச்சர் கெஜ்ரிவாலை சந்திக்கப்போவதாக யாரிடமும் தெரிவிக்காமல், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சந்திக்கச் சென்றுள்ளார். முதலமைச்சரை சந்திக்க வருவதாக அவர் ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. முதல்வர் கெஜ்ரிவால் அன்று வேறு பணியில் இருந்ததால் மாலிவாலை சந்திக்க இயலவில்லை. அதனால் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அன்றைய தினம் அவர் பிபவ் குமாருக்கு பதில் முதலமைச்சரை சந்தித்திருந்தால், பிபவ் குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் மீது சுமத்தியிருக்கலாம்.
ஊழல் தடுப்புப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத ஆள்சேர்ப்பு வழக்கில் ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்படலாம் என்ற கட்டத்தில் உள்ளது.

பாஜக மாலிவாலை பயன்படுத்தி கெஜ்ரிவாலுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகிறது. கடந்த திங்கள் கிழமையன்று கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாகவும், மார்பிலும் வயிற்றிலும் உதைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.  இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.

டெல்லி காவல்துறை பாரபட்சமற்றதாக இருந்தால், மாலிவாலுக்கு எதிரான குமாரின் புகாரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். மாலிவாலின் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தது போலவே அவரது புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலிவாலின் அலைபேசி அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து, அவர் எந்த பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதைப் பார்க்க வேண்டும்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags :
Advertisement