அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? - ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தொடர்ந்து 3வது முறையாக அவகாசம் கேட்டதால் அதிருப்தி அடைந்த நீதிபதி என்.சதீஷ்குமார், பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இதுவரை இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததோடு, வழக்கு குறித்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : முதல் டி20 போட்டி - இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
இதனையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.