அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் தவெக? விஜய் வருகிறாரா?
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக நாளை (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த கூட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, தவெக உள்பட தமிழநாட்டில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.
இதையும் படியுங்கள் : “சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர்” – அண்ணாமலை புகழாரம்!
அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக நாம் தமிழா், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் அறிவித்தன. இதற்கிடையே, நாகையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து, இந்த கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.