ஸ்ரீதேவியை சொர்க்கத்தில் கைது செய்வார்களா? இயக்குநர் கோபால் வர்மா கேள்வி!
அல்லு அர்ஜூனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவியை சொர்க்கத்திற்கு சென்று கைது செய்வார்களா? என இயக்குநர் கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் உள்பட பலர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 5ம் தேதி உலகம் முழுதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்னதாக நவ.4ஆம் தேதி இப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனைப் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே இதுதொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்தனர். ஒருநாள் இரவு சிறையில் இருந்த அல்லு அர்ஜூன் மறுநாள் காலை வெளியே வந்தார். அல்லு அர்ஜூனின் கைதுக்கு திரையுலகினரும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநரும், அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவருமான ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.
அதில், “புகழ்பெற்றது ஒரு குற்றமா? அனைத்து நடிகர்களும் அல்லு அர்ஜுன் கைதுக்கு வலுவாக போராட வேண்டும். அரசியல் அல்லது சினிமா என எந்த பிரபலமாக இருந்தாலும் அவர்கள் அளவுக்கு அதிகமாக புகழ்பெற்றது ஒரு குற்றமாக கருத முடியுமா?
எனது க்ஷண க்ஷணம் படப்பிடிப்பில் ஸ்ரீதேவியைப் பார்க்க ஏராளமான மக்கள் வந்தபோது, மூவர் உயிரிழந்தனர். அதனால் தெலங்கானா காவல்துறை இப்போது சொர்க்கத்துக்குச் சென்று ஸ்ரீதேவியை கைது செய்வார்களா?” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.