செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு - ஆக.20-க்கு விசாரணையை ஒத்திவைத்தது #SupremeCourt!
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 20-ந் தேதிக்கு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு என இரு தரப்பிற்கும் இடையே காரசார வாதங்கள் நடந்தன. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் மின்னஞ்சல் மூலம் தகவல் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப் போகிறோம் என்ற அறிவுறுத்தல் இருந்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு இன்று 62 ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டது.
இருப்பினும் இன்று நீதிமன்ற அலுவல் தொடங்கிய உடனே இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்பொழுது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தலைமை வழக்கறிஞர் வேறு ஒரு வழக்கில் இருப்பதால் அவரால் தற்போது இந்த வழக்கில் ஆஜராக முடியாது. எனவே வழக்கு விசாரணையை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இன்றைய கடைசி வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். வழக்கின் விசாரணை பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய வழக்கை வரும் 20-ந் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.