For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ரோபோக்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்லுமா?” - எலான் மஸ்க்கிடம் துருக்கி வீரர் யூசுப் டிகெக் கேள்வி!

10:58 AM Aug 05, 2024 IST | Web Editor
“ரோபோக்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்லுமா ”   எலான் மஸ்க்கிடம் துருக்கி வீரர் யூசுப் டிகெக் கேள்வி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ஸ்டைலாக இலக்கை சுட்டு வியப்பில் ஆழ்த்திய யூசுப் டிகெக், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூன் 26-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 39 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கடந்த 30-ம் தேதி ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியா சார்பாக மனு பாகர் - சரப்ஜோத் சிங், துருக்கி சார்பாக தர்ஹான் - யூசுப் டிகெக், தென் கொரியா சார்பாக லீ வான்ஹோ - ஒ யே-ஜின்னை ஜோடிகள் பங்கேற்றனர். இதில், கொரியாவை வீழ்த்தி இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இறுதிச் சுற்று ஆட்டத்தில் துருக்கியை வீழ்த்தி, செர்பியா தங்கப் பதக்கம் வென்றது. 14 புள்ளிகளுடன் துருக்கி வெள்ளிப் பதக்கம் வென்றது.

செர்பியா தங்கம் பெற்றிருந்தாலும், இந்த போட்டியின்போது துருக்கி  வீரர் 51 வயதான யூசுப் டிகேக்கின் உடல்மொழி பலரையும் கவர்ந்துள்ளது. பொதுவாக துப்பாக்கி சுடும் வீரர்கள் பாதுகாப்பிற்காகக் கண் மறைவு கண்ணாடி, அதிக சத்தத்தை உணராமல் இருக்க இயர் பட்ஸ் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்திக்கொண்டு போட்டியில் பங்கேற்பார்கள்.

ஆனால் சாதாரணமாகப் பயன்படுத்தும் கண்ணாடி மற்றும் சிறிய அளவிலான இயர் பட்ஸ் மட்டுமே பயன்படுத்தி, ஒரு கையை தனது உடையில் வைத்துக்கொண்டு யூசுப் டிகேக் சினிமாவில் வரும் ஹீரோக்களை போல, ஸ்டைலாக  துப்பாக்கியை எடுத்து இலக்கை நோக்கிச் சுட்டார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் யூசுப் டிகேக் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், “வணக்கம் எலான், எதிர்கால ரோபோக்கள் தங்கள் கைகளை பைக்குள் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா? கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரான இஸ்தான்புல்லில் இதைப் பற்றி விவாதிப்பது எப்படி?” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவில் கமெண்ட் செய்த எலான் மஸ்க், “ரோபோக்கள் ஒவ்வொரு முறையும் குறியின் மையத்தைத் தாக்கும். மேலும், நான் இஸ்தான்புல்லுக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இது உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாகும்” என பதிலளித்துள்ளார்.

மனித குலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புரட்சிகரமான விஷயங்களில் ஒன்று, 2025 இல் வெளியாக இருக்கும் எலான் மஸ்கின் மனித ரோபோ (Optimus). மனிதர்களின் உடல் வடிவமைப்பை ஒத்திருக்கும் வகையில் துல்லியமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் பல பணிகளை செய்யும் திறன் கொண்டது எனவும், மனிதர்கள் செய்யும் சலிப்பான, ஆபத்து நிறைந்த பணிகளை இந்த ரோபோக்கள் மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் என்பதால், வேலையின்மை பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இவை 2026-ம் ஆண்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement