“போர்க்களத்தை விட்டு வெளியேற மாட்டேன், தொடர்ந்து போராடுவேன்” - ஹர்திக் பாண்டியா பேச்சு!
“போர்க்களத்தை விட்டு வெளியேற மாட்டேன், தொடர்ந்து போராடுவேன்” என கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார். 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 51 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 51வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சொற்ப ரன்களில் ஒருவர் பின் ஒருவராக கொல்கத்தா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 169 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தாவை போலவே தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. 18.5 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறியுள்ளதாவது;
“இந்தப் போட்டியில் எங்களது பேட்டிங் இன்னிங்ஸில் நாங்கள் முறையான பார்ட்னர்ஷிப்பை அமைக்க தவறினோம். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும்.
நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால் அதற்கு பதில் சொல்ல சிறிது நேரம் தேவை. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு விக்கெட் கொஞ்சம் நன்றாக இருந்தது. தொடர்ந்து போராடுங்கள். அதைத்தான் நான் எனக்கு சொல்லிக் கொள்கிறேன். போர்க்களத்தை விட்டு வெளியேறாதீர்கள். கடினமான நாட்கள் வரும். ஆனால் நல்லதும் வரும். இது சவாலானதுதான். ஆனால் அந்த சவால் உங்களை சிறந்ததாக்கும்” என தெரிவித்துள்ளார்.
11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 8வது தோல்வியாகும். இதுவரை மூன்று போட்டிகளிலேயே மும்பை இந்தியன்ஸ் வெற்றிப் பெற்றுள்ளது.