உலகக்கோப்பை கனவிற்கு உயிர் கொடுப்பாரா முகமது ஷமி?
உலகக் கோப்பை கனவிற்கு உயிர்கொடுப்பாரா சமி எனும் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது அவரது ஆட்டம்.... உலகக்கோப்பை தொடரில் முகமது சமியின் அதகள ஆட்டம் குறித்து பார்க்கலாம்....
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்திய அணியோ, எல்லையில்லா இன்பத்தை ரசிகர்களுக்கு தொடர்ந்து வாரி வழங்கி வருகிறது. நடப்பு உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத அணியாக இந்திய அணி வெற்றி முகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் முதல் வெற்றி தொடங்கி, இலங்கையுடன் கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றி என ஒவ்வொன்றிலும், இந்தியாவின் கைதான் ஓங்கி இருந்தது.
இந்திய வீரர்களை குறித்து பேசும் போது பந்துவீச்சாளர்களின் பங்களிப்பை ஒருபோதும் நாம் கடந்துவிட முடியாது. அதிலும் பெஞ்ச்-ல் உட்கார வைக்க பட்ட முகமது சமியின் அசாத்திய பந்துவீச்சு, எதிரணிகளை மிரளச் செய்திருக்கிறது. அடுத்தடுத்து வெற்றிகளின் ரிதம் என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி ஒட்டுமொத்தமாக அவரை முதல் நான்கு போட்டிகளில் பெஞ்ச்-ல் உட்கார செய்தது இந்திய அணி. இது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் ஆடுகளங்களுக்கு தகுந்தாற்போல பந்துவீச்சு பயன்படுத்தப்பட்டு வருகிறது என பலரும் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். உண்மையில் சாதாரணமான ஒன்றுதான், ஆனால் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக செய்வேன் என்பது போல தீயான சம்பவங்களை செய்திருக்கிறார் சமி. தீ என்றால் வெறும் தீ அல்ல, காட்டுத்தீ.
ஆம், தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தனது மின்னல் வேக பந்துவீச்சை வெளிப்படுத்தி, நடப்பு உலகக் கோப்பை தொடரின் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருக்கிறார் சமி. சமியின் ஸ்பெஷல் என்றால் அது குறிப்பிட்ட வேகத்தில் சீம் பொஷிஷனில் பந்துகளை 3 ஸ்டம்புகளை பார்த்து வீசுவது தான். அந்த பந்துகள் அனைத்தும் சீம்களில் பிட்ச் ஆனால் இங்கு நடப்பவை அனைத்து பேட்டருக்கு கனவாக தான் தெரியும். நொடி பொழுதில் அந்த பேட்டர் LBW ஆகி வெளியேறி விடுவார் அல்லது போல்ட் ஆகி வெளியேறுவார்.
இந்த துல்லியமான பந்து வீச்சினை ஒவ்வொரு ஓவரின் போதும், சராசரியாக ஒரே இடத்தில் பிட்ச் செய்து பேட்டர்களை கிரங்கடிக்கச் செய்வது அவரது சீக்ரெட். இந்திய அணியின் இண்டெலிஜெண்ட் குழுவானது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முகமது சமியை உள்ளே கொண்டு வர திட்டமிட்டது போல, தர்மசாலா மைதானத்தில் அவரை களமிறக்கியது. ஆக்ரோஷமான பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்து அணியின் பிரமாண்ட டாப் ஆர்டர்களான வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் என மூவரையும் துவம்சம் செய்த பின்னர், லோயர் ஆர்டர்களான மிட்செல் சாண்ட்னர் மற்றும் மேட் ஹென்றி ஆகியோரை அவுட் செய்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இவரையா பெஞ்ச்-ல் உட்கார வைத்திருந்தார்கள் என்பது போல அபாரமான பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தியிருந்த ஷமிக்கு, லக்னோ மைதானத்திலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் தனது மிரட்டலை தொடர்ந்த சமி, இங்கிலாந்து வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் ஆதில் ரஷீத் என 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம் காட்டினார். 2 போட்டிகளில் தான் விளையாடினார், அதற்குள்ளாக 9 விக்கெட்டுகளா என ஆச்சரியப்பட்ட அதே நேரம், தற்போது உலக கோப்பை தொடரின் முன்னணி விக்கெட் டேக்கராக தொடர்ந்து வருகிறார் சமி.
நேற்று நடந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கைக்கு டார்கெட்டிங் பந்துவீச்சாளராக என்னவோ சிராஜ் இருந்திருக்கக் கூடும். ஆனால் இலங்கையின் ஒட்டுமொத்த அணியையும் துவைத்தெடுத்தார் முகமது சமி. அதே சமயம் முகமது சிராஜ், சமியோடு நிற்க இருவரும் நேற்றி நிகழ்த்திய அரங்கேற்றம் என்பது பாகிஸ்தானில் நடைபெற்ற டி10 லீக் கிரிக்கெட் தொடரை பார்த்தது போன்றே இருந்தது.
358 ரன்கள் இலக்கு என்பது இமாலய இலக்காக இருந்தாலும், அந்த இமாலய இலக்கை வான்கடே விக்கெட்டில் இரண்டாவது பேட்டிங்கின் போது அது சாத்தியமே. ஆனால் ஜாஸ்பிரித் பும்ரா வீசிய முதல் பந்தில் ஏற்பட்ட சீம் மூவ்மென்ட் வைத்தே தெரிந்தது இன்று முகமது சிராஜ் மற்றும் முகமது சமி ஆகியோர் கலக்க போகிறார்கள் என்று. ஆனால் இலங்கை அணியை சிதைத்து விடுவார்கள் என்று யாரும் நினைத்துப் பார்த்திடவில்லை.
எப்போதும் நல்ல பந்துவீச்சாளர்களை மதிக்கும் வான்கடே மைதானம் முகமது சமியை கைவிடவில்லை. சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஹேமந்தா, துஷ்மந்த சமீரா, கசுன் ரஜிதா ஆகியோரின் விக்கெட்டுகளை கொத்துக் கொத்தாக விழுங்கச் செய்தார் முகமது சமி. அதே நேரம் மற்றொரு பக்கம் முகமது சிராஜுக்கும், இலங்கைக்குமான நெருக்கமான தொடர்பு எதிர்பார்த்த விக்கெட்டுகளை கொடுத்தது.
இந்த அதிரடியானது இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றியை உலகக் கோப்பை வரலாற்றில் வென்று கொடுக்க, இந்திய கிரிக்கெட்டில் முக்கிய சாதனையையும் படைத்தார் முகமது சமி. ஆம் 14 உலகக் கோப்பை இன்னிங்ஸ்களில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜகீர் கான் சாதனையை முறியடித்தார் முகமது சமி. தன்னை பெஞ்ச்-ல் உட்கார வைத்தது பற்றி எனக்கு கவலை இல்லை, அணிக்கு எப்போது எனது பங்களிப்பு தேவைப்படுகிறதோ, அப்போது நான் எனது பணியை சிறப்பாக செய்வேன் என கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முகமது சமி கூறியதை நாம் பார்த்திருக்கிறோம்.
அதே சமயம் முகமது சமிக்கு மேலும் இரு போட்டிகள் மற்றும் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வகிப்பார் முகமது சமி.