ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா? #ICCWomen’sT20WorldCup இன்று தொடக்கம்!
மகளிருக்கான 9-ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (அக். 3) தொடங்குகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை போட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியின் 9வது தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (03-10-24) தொடங்குகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் குரூப் 'ஏ'-விலும், வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை குரூப் 'பி'-யிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். அரையிறுதியில் முன்னேறும் இறுதி அணிகளுக்கு வரும்.20ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடைபெறும். முன்னதாக இந்தப் போட்டி வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்தது. அங்கு ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியான ஆஸ்திரேலிய அணி 6 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் 2 முறை ஹாட்ரிக் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை தலா ஒருமுறை சாம்பியனாகியுள்ளன.