பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போகிறதா தேமுதிக? - கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்!
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தையை தேமுதிக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், தேமுதிகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவிடம் 5 தொகுதிகள் கேட்கவுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், விருதுநகர், தென்சென்னை ஆகிய தொகுதிகளை விருப்பப் பட்டியலாக வழங்கி உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 11-ம் தேதி சென்னை வரும் நிலையில், அன்றைய தினம் பாஜக - தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.