மூன்றாவது முறை ஆஸ்கார் வெல்வாரா ஏஆர் ரஹ்மான்?
2025 ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல், பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஆடுஜீவிதம்' படம் இடம்பெற்றுள்ளது.
பிரித்விராஜ் நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த திரைப்படம் ஆடுஜீவிதம். இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) தழுவி எடுக்கப்பட்டதாகும். பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக் கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. கடந்த மார்ச் மாதம் வெளியான ஆடு ஜீவிதம் படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், உள்ளிட்ட 9 பிரிவுகளில் கேரளா மாநில அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆடுஜீவிதம் படத்தில் இடம்பெற்ற, 'பெரியோனே' என்கிற பாடல், சிறந்த பாடல் மற்றும் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் பின்னணி இசைக்காகவும் ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதில் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆடுஜீவிதம் படம் இடம் பெற்றுள்ளது.
சிறந்த பாடல் பிரிவில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஆடுஜீவிதம் படத்தில் இருந்து இன்டிக்ஃபேர், புதுமழ ஆகிய இரு பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பின்னணி இசை பிரிவில் 146 படங்கள் உள்ளன. இதில் வாக்கெடுப்பு நடத்தி 15 பாடல்கள், 20 பின்னணி இசை அடுத்தக் கட்டத்திற்கு தேர்வாகும். இதன் மூலம் 3-வது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பலரும் அவர் விருது பெற வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.