தவெக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா ஆதவ் அர்ஜுனா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தது, விசிக கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
விசிகவிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்ததிலிருந்தே, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என வியூகங்கள் வகுக்கப்பட்டன. இதனிடையே, ஆதவ் அர்ஜுனாவின் voice off commons என்ற நிறுவனத்துடன் தமிழக வெற்றிக் கழகம் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா வரும் பிப்ரவரி 2ஆம் தேதிதவெக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
தவெக ஆலோசகராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால், ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் ஆலோசராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் தவெக தலைவர் விஜய் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. ஆதவ் அர்ஜுனா கொடுக்கும் தகவல் அடிப்படையில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் எனவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைந்த பிறகு அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிப்பு கட்சியின் தலைவர் விஜய் விரைவில் வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.