தென்கொரியாவில் பற்றி எறியும் காட்டுத்தீ - பல ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசம்!
தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள உள்ள வனப்பகுதியில் கடந்த வாரம் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வருகின்றது.
இதன் காரணமாக சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது. ஏற்கனவே, மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் 600க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயில் இருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களும், 100 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 90 சதவீத காட்டுதீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.