குன்னூரில் உணவு தேடி வந்த யானைகள் ரயில்வே கேண்டீனை சேதப்படுத்தின!
குன்னூர் வனப்பகுதியில் உள்ள ஹில்குரோவ் ரயில் நிலைய கேண்டீனை, உணவு தேடி வந்த யானைகள் சேதப்படுத்தியது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.
இதனிடையே, கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
அந்த வகையில், தொடர் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் தற்போது பசுமை திரும்பியுள்ளது. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து யானைக் கூட்டங்கள் குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை 5-க்கும் மேற்பட்ட யானைகள் ஹில்குரோவ் ரயில் நிலையத்திற்கு சென்று முகாமிட்டது.
இதனையடுத்து உணவைத் தேடி சென்ற யானைகள் அங்கிருந்த ரயில்வேவுக்கு சொந்தமான கேண்டீனை துவம்சம் செய்தது. இந்த சம்பவம் அங்கிருந்த ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. ரயில் நிலையத்தில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.