#Nilgiris | குடியிருப்புகளை சேதப்படுத்தும் ஒற்றை யானை - நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் போராட்டம்!
நீலகிரியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி, பிதர்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் புல்லட் ராஜா என்ற ஒற்றை யானை உலா வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து சேதப்படுத்தி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேரங்கோடு பகுதியில் முகாமிட்டுள்ள புல்லட் ராஜா கடந்த 2 நாட்களாக ஐந்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்திய நிலையில், நள்ளிரவு மீண்டும் சேரங்கோடு பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் எட்டிற்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி உள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த தோட்ட தொழிலாளர்கள் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கூடலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் கிராம மக்கள் உடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் யானையின் நடமாட்டத்தால் பள்ளி மாணவர்கள், வேளைக்கு செல்பவர்கள் அச்சத்தோடு செல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.