விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு சிறையில் இருந்து வெளியேறினார்!
உளவு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதால் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விக்கிலீக்ஸ் எனும் ஊடகத்தை நடத்தி வரும் ஜூலியன் அசாஞ்சே, கடந்த 2010 ஆண்டு அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் வீடியோவை வெளியிட்டார். இந்த தாக்குதலில் ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் 2 பேர் உட்பட 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது மட்டுமல்லாது பல ராணுவ ரகசியங்களையும் வெளியிட்டது அவருடைய விக்கிலீக்ஸ் ஊடகம். இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இந்த பின்னணியில் அவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்சே (52) கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.
இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பான வழக்கு லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் “ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவரது கருத்து சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமைகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அசாஞ்சேவுக்கும் வழங்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். இவை குறித்து 3 வாரங்களுக்குள் அமெரிக்க அரசு பதில் அளிக்க வேண்டும்.” என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
Julian is free!!!!
Words cannot express our immense gratitude to YOU- yes YOU, who have all mobilised for years and years to make this come true. THANK YOU. tHANK YOU. THANK YOU.
Follow @WikiLeaks for more info soon…pic.twitter.com/gW4UWCKP44
— Stella Assange #FreeAssangeNOW (@Stella_Assange) June 25, 2024
இந்த நிலையில் அமெரிக்க உளவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற ஆவணங்களின் மூலம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் இந்த வாரம் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார், அங்கு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு தாயகம் திரும்ப அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஜூலியன் அசாஞ்சேவின் மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே தனது எக்ஸ் தள பக்கத்தில் “ இனி ஜுலியன் அசாஞ்சே சுதந்திரமானவர்.. அவரது விடுதலையை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.