சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று (மே 16) அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் அரை மணிநேரமாக தொடர் கனமழை பெய்தது. இதையடுத்து, கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானர்.
இதையும் படியுங்கள் : மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கநல்லூர், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.