WI vs IND | 3வது டி20 கிரிக்கெட்... வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவதாக டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அணியும், 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நேற்று (டிச.19) நவி மும்பையில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 77 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மேலும் , 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிச.22) நடைபெறுகிறது.