For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தலுக்கு முன்னர் கெஜரிவால் கைது ஏன்? - அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி!

11:17 AM May 01, 2024 IST | Web Editor
தேர்தலுக்கு முன்னர் கெஜரிவால் கைது ஏன்    அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
Advertisement

 மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் கைது செய்யப்பட்டது ஏன் என்று அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

Advertisement

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 2-ஆவது நாளாக நேற்று விசாரணை நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பை போட்டி : ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய வீரர்களை களமிறக்கிய ஆஸ்திரேலிய அணி!

கெஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், "இந்த வழக்கில் சாட்சிகள், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களில் ஐந்து அறிக்கைகளில் மட்டுமே கெஜரிவாலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனுவை அமலாக்கத் துறை முதலில் எதிர்த்தது. ஆனால், முதலமைச்சர் கெஜரிவால் பெயரைக் குறிப்பிட்ட பிறகு அமலாக்கத் துறை அவர்களின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை' என்றார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் நீதிபதிகள் 5 கேள்விகளை முன்வைத்தனர். "ஒருவரின் வாழ்க்கையும் சுதந்திரமும் மிகவும் முக்கியமானவை. அதை நீங்கள் (அமலாக்கத் துறை) மறுக்க முடியாது' என்று சுட்டிக் காட்டி, நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் வருமாறு:

"1. இந்த வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் எதுவுமில்லாமல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ.) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க முடியுமா?. இவ்வழக்கில் இதுவரை சொத்து முடக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அத்தகைய நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், மனுதாரர் (கெஜரிவால்) அதனுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளார் என்பதை அமலாக்கத் துறை தெளிவுபடுத்த வேண்டும்.

2. கலால் கொள்கை ஊழல் வழக்கில் காவலில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று அவருக்குச் சாதகமாகவும், மற்றொன்று அவருக்கு எதிராகவும் உள்ளது. இதில், மனுதாரர் (கெஜரிவால்) வழக்கு எந்தப் பகுதியில் வருகிறது?

3. மனுதாரர் ஜாமீன் கோருவதற்குப் பதிலாக தனது கைது மற்றும் காவலில் வைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியிருப்பதால் பி.எம்.எல்.ஏ. பிரிவு 19 எவ்வாறு பொருள்விளக்கம் அளிக்கப்படும்?

4. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட பிரிவு 8-இன்கீழ் ஒரு வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் தொடங்குவதற்கும், கைது நடவடிக்கைக்கும் இடையிலான அதிகபட்ச காலவரம்பு 365 நாள்களாகும். ஆனால், இந்த வழக்கில் நீண்டகால இடைவெளி இருந்திருக்கிறது.

5. பொதுத் தேர்தலுக்கு முன்னர் மனுதாரரர் கைது செய்யப்பட்ட நேரம் தொடர்புடையது"

என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags :
Advertisement