Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
04:55 PM Nov 15, 2025 IST | Web Editor
மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் கட்டணத்தை பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில், திருத்தி அமைக்க வேண்டும் என்று வாடகை ஊர்தி ஓட்டுனர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை செய்ய திமுக அரசு மறுத்து வருகிறது. வாடகை ஊர்தி கட்டணங்களை கடந்த 12 ஆண்டுகளாக உயர்த்தாத திமுக அரசு, ஏழை ஓட்டுனர்களின் வயிற்றில் அடிப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisement

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி உயர்த்தப் பட்டன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 12 ஆண்டுகள் நிறைவடைந்து 13-ஆம் ஆண்டு நடைபெற்று வரும் நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை.

கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது; காப்பீடு, உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து விட்டன. வாகனங்களின் உயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்து விட்டன. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டன. ஆனால், அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படாததால், அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஏழை ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.

செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதும் கூட வாகன வாடகை, எரிபொருள் செலவு போக அவர்களுக்கு கிடைப்பது சில நூறுகள் மட்டும் தான். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று வேளையும் உணவு உண்ண முடியவில்லை. வாகனங்களுக்கான காப்பீடு, வரிகள், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடிய வில்லை. அதற்காக கடன் வாங்க வேண்டியிருப்பதால் லட்சக்கணக்கான ஓட்டுனர்கள் கடனாளியாகிவிட்டனர். மேலும் இயல்பை விட அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் ஓட்டுனர்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஆட்டோ ஓட்டுனர்கள் சில இடங்களில் கூடுதல் கட்டணம் கேட்கும் போது, அவர்களுக்கும் வாடகைக்கு பயணிக்கும் மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த அவல நிலைக்கு 12 ஆண்டுகளாக ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்களை திமுக அரசு உயர்த்தாது தான் அடிப்படைக் காரணம்.

எரிபொருள் விலை உயர்வு, பிற கட்டணங்களின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களின் குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆகவும், அதன்பின் கிலோ மீட்டருக்கு ரூ.25 வீதமும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2022-ஆம்ஆண்டில் ஆணையிட்டது. அதன்படி அரசுப் போக்குவரத்துத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை அக்குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதனால் வாகன ஊர்திகளுக்கான கட்டணங்களும் இதுவரை உயர்த்தப்படவில்லை.

ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கான வாடகைக் கட்டணம் உயர்த்தப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சரை சென்னையில் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது இந்த விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய கட்டண விகிதம் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின் இதுவரை 10 மாதங்களாகி விட்டன. சட்டப்பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என பல தருணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார். ஆனால், வாடகை ஊர்திக் கட்டணங்கள் மட்டும் இன்னும் உயரவில்லை; ஓட்டுனர்கள் துயரமும் தீரவில்லை.

லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திமுக அரசு, நிலைமையை சமாளிக்க முடியவில்லை என்று ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை உயர்த்துகிறது. உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைக் காரணம் காட்டி தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவதற்காக கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி எந்த நேரமும் அறிவிப்பை வெளியிட தயாராக இருக்கிறது. ஆனால், ஏழை ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்? ஏழை ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து எதிர்பார்ப்பது எதுவும் கிடைக்காது என்ற அரசின் அலட்சியம் தானா?

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது இந்தப் போக்கை கைவிட்டு, மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Anbumani Ramadossautoauto faresPMKquestionsTaxi
Advertisement
Next Article