நவீன கிரிக்கெட் உலகின் கிங் என 'விராட் கோலி' அழைக்கப்படுவது ஏன்? "விராட் கோலி 35" ஸ்பெஷல்!
சச்சின்... சச்சின்...
சச்சின்..... சச்சின்.....
சச்சின்....... சச்சின்.......
இந்த சத்தத்தின் அலைவரிசைகள் எழுப்பும் ஒருவிதமான உணர்வு சச்சினுக்கு மட்டுமே பொருந்தும். சச்சின் அவுட் ஆனால் டிவியை அணைத்து விடுவது தான் வழக்கம். ஆனால் அந்த நிலையை தனது ஃபினிஷிங் கலையால் மாற்றியமைத்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் MS தோனி. இருந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் கோலியின் ஆட்டத்தை நம்பி மட்டுமே சச்சினின் ஓய்வுக்கு பிறகான இந்திய கிரிக்கெட் இருந்து வந்திருக்கிறது.நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் இரத்தம் பாயும் ஒவ்வொரு ரசிகனுக்கும், ஒன் டே செட்டில்மெண்ட் என்பது போல், மிகவும் திருப்தியான கிரிக்கெட்டை பார்க்கச் செய்த வீரர்களில் விராட் கோலியின் கிளாஸ் ஆட்டம் என்றும் டாப் நாக் தான். இளசுகளில் இருந்து பெரியவர் வரை கோலியை டாட்டூவாக குத்தாதவர்கள் இருக்க முடியாது.
ஒரு காலத்தில் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சினின் சாதனைகளை தகர்த்திட முடியுமா என்று, கால் மேல் கால் போட்டு கமெண்டரி செய்த ஜாம்பவான்கள் எல்லாம், விராட் கோலியை அவர்களது ஃபேவரைட் பேட்டராக தேர்ந்தெடுக்கச் செய்தது தான் விராட்டின் வெற்றியின் அடையாளமாகும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 26,000 ரன்கள், 78 சதங்கள், 130 க்கும் மேற்பட்ட அரைசதங்கள் என ஒவ்வொன்றிலும் ரெக்கார்டுகளை உடைத்தெறிந்து பயணிக்கும் விராட் கோலி, நவீன கிரிக்கெட்டின் கிங்காகவே திகழ்கிறார். திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல விராட் கோலி எப்போதும் உச்சத்தில் இருந்துவிடவில்லை. ரியாலிட்டியில் காணும் தாதாக்களை போல அவ்வப்போது வீழ்ந்து தான் மீண்டு எழுந்திருக்கிறார்.
ரசிகர்களால் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, நடப்பு ஆண்டில் தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்திருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது 267வது இன்னிங்ஸில் இந்த சாதனையை அவர் படைத்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
பொதுவாகவே இந்தியாவின் சேஸ் மாஸ்டர் என்றாலே அது சச்சின் டெண்டுல்கர் தான் எனும் அடையாளத்தை தன் மீது திசை திருப்பி, சேசிங்கின் போது மட்டும் சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்த 5490 ரன்களை தனது 92 இன்னிங்ஸ்களிலேயே கடந்து மிஸ்டர் கன்சிஸ்டன்சியாக வளர்ந்திருக்கிறார் கோலி.
சர்வதேச ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வரும் விராட் கோலியின் சில இன்னிங்ஸ்கள், கிரிக்கெட்டில் காலத்தால் அழியாத பல பெருமைகளை பெற்றுள்ளன. அவர் ஆடும் தனித்திறன் வாய்ந்த கவர் டிரைவ், ஆன் டிரைவ், லேட் கட் மற்றும் ஸ்ட்ரைட் டிரைவ் என ஒவ்வொன்றும் கண்களில் ஒத்திக்கொள்ளும் விதத்திலானவைகளாகவே பார்க்கப்படுகிறது.களத்தில் தன்னை எதிரியாக நினைப்பவர்களுக்கும் கூட, ”யார் இந்த மனிதர், இப்படி விளையாடுகிறார் என நினைக்க தூண்டுவது மட்டுமல்லாமல், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஒவ்வொன்றிற்கும் தனது ஆட்டத்தின் மூலம் பதிலளித்து வருகிறார் கோலி. பேட்டிங்கில் ஆக்கிரோஷம் காட்டும் கோலி, பீல்டிங்கில் தனது எல்லை பகுதிகளில் பந்துகளை எப்போதும் தாண்டச்செய்வது இல்லை.
விராட் கோலியின் கேப்டன்சியில் 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்தியா, 40 போட்டிகளில் வெற்றியும், 17 போட்டிகளில் தோல்வியும், 11 போட்டிகளில் சமனிலும் முடித்திருந்திருக்கிறது. இது இந்திய டெஸ்ட் அணியை கேப்டன்சி செய்த கேப்டன்களில் அதிகபட்ச ஆவ்ரேஜாகும். மேலும் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் போட்டிகளை கேப்டன்சி செய்த கேப்டன் எனும் எம் எஸ் தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார் கோலி.
95 ஓடிஐ போட்டிகளில் 65 போட்டிகளில் வெற்றியும், 50 டி20 போட்டிகளில் 30 போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறது இந்தியா. இதில் ஒருநாள் போட்டிகளில் அவர் கேப்டனாக இருக்கும் போது விளாசிய 21 சதங்கள், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு பின் அவரது பெயரை இடம்பிடிக்கச் செய்தது. இன்னும் இரண்டு செஞ்சுரிகள் விளாசியிருந்தார், அவர் ரிக்கி பாண்டிங் விளாசிய 22 சதங்களை கடந்திருக்க கூடும்
சக வீரர்களுடன் களத்தில் ஜாலியான விளையாட்டு, ரசிகர்களை ஊக்குவிக்க அவ்வப்போது நடனம் மற்றும் சக அணி வீரர்களை உற்சாகப்படுத்த ரசிகர்களிடம் மைதானத்தில் இருந்தே கோரிக்கை விடுப்பது என எல்லாவற்றிலும் விராட் கோலி தரமான மனிதர் தான். சில நேரங்களில் எதிரணி வீரர் மீதான வன்மத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தும் போது கூட, இப்படி செய்யக் கூடாது என சொல்லி அவர்களது விளையாட்டை உற்சாகப்படுத்த அறிவுறுத்துவார்.
இது போன்ற செயல்களின் போது, 'அந்த மனசுதான் சார் கடவுள்' என மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்கள், விராட் கோலியை ஒருபோதும் கிரிட்டிசைஸ் செய்தது இல்லை. களத்தில் போராளியாகவும், வெளியில் நல்ல மனிதராகவும் இருக்கும் விராட் கோலியின் போராட்ட குணத்தை ஒரு போதும் உதாசினப்படுத்தியதும் இல்லை.
அதனால் தான் என்னவோ, விராட் கோலி கிங் கோலியாகவே இருந்து வருகிறார். பிரெய்ன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் என பல முன்னணி நட்சத்திரங்களின் சாதனைகள் ஒவ்வொன்றையும் குறி வைத்து தகர்த்து வரும் விராட் கோலியின் எனர்ஜி லெவல் அன்றைவிட இன்று பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நவம்பர் 5-ம் தேதி பிறந்தநாள் தினம் கொண்டாடும் விராட் கோலிக்கு தற்போது 35 வயது. இருப்பினும் 2008-ம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டிகள், 2010-ம் ஆண்டில் டி20 போட்டிகள், 2011-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகள் என ஒவ்வொன்றிலும் கால் தடம் பதித்த போது இருந்த உற்சாகத்தை விட இப்போது பன்மடங்கு உற்சாகத்துடன் விளையாடி வருகிறார் இந்த சேஸ் மாஸ்டர் கோலி.
நடப்பு உலகக் கோப்பை வரையிலான தனது கிரிக்கெட் பயணத்திலேயே முறியடிக்க முடியாத எண்ணற்ற பல சாதனைகளை கடந்துவிட்டார். ஆனால் இதே போல அடுத்த உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியில் அவர் தொடர்வது நிச்சயம் என்றால், கோலியே ஒரு புதிய சாதனையை படைத்து, அதை இந்திய கிரிக்கெட்டுக்கு கிங் கோலி ஸ்பெஷலாக தான் பரிசளித்திட முடியும். அதுவரை எப்போதும் போல அவரது வ்ரிஸ்ட்களை வைத்து இளைஞர்களுக்கு ஸ்டிரைக் ரொட்டேட் செய்து கொண்டிருப்பார் இந்த 'கிங்' கோலி..
- நந்தா நாகராஜன்