விஜய்யின் #GOAT மூன்று மணி நேர நீளம் ஏன்? வெங்கட்பிரபு விளக்கம்!
‘கோட்’ படத்தை 3 மணி நேரம் ஓடக்கூடியதாக உருவாக்கியதன் பின்னணி என்ன என்று வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
மேலும் இது விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு வெளியாகும் முதல் படமாகும். ஏற்கனவே இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு இருந்தனர். தொடர்ந்து, தி கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 17 ம் தேதி வெளியானது. தொடர்ந்து, இந்த ட்ரெயிலர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும், ட்ரெய்லரை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
கோட் திரைப்படம் 3 மணி நேரம் என தகவல் வெளியாகிய நிலையில் இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணலில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து வெங்கட் பிரபு பேசியதாவது,
"முதலில் 3 மணி நேரம் படம் என்பது எங்களுக்குமே சிறிது பயமாக இருந்தது. ஆனால் சில படங்களின் கதையை கூறுவதற்கு அவ்வளவு நேரம் செலவிட்டே ஆகவேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும்.
அதிகமான சுவாரசியத்துக்காக எல்லாவற்றையும் கட்செய்துவிட்டு தரமுடியாது. 3 மணி நேரமாக இருந்தாலும் படம் சுவாரசியமாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. இதை குறிப்பாக வைக்க டிரெய்லரிலேயே 3 நிமிடங்கள் வைக்க திட்டமிட்டோம். ஆனால் கதை அதிகமாக சொல்லிவிடுகிற மாதிரி இருப்பதால் 2.40 நிமிடங்களாக குறைத்தோம். இனிமேல் விஜய் நடிக்க போவதில்லை என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்குமென நினைத்து அதை அப்படியே வைத்துள்ளோம்."
இவ்வாறு இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.