For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் திட்டம்!’ 2021-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்போது பேசுபொருளானது ஏன்?

07:59 PM Apr 16, 2024 IST | Web Editor
‘பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் திட்டம் ’ 2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்போது பேசுபொருளானது ஏன்
Advertisement

பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தால் பயனடைந்த பெண் ஒருவரின் கருத்து, அந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Advertisement

நேற்று முந்தினம் (14.04.2024) ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசியிருக்கிறார்.  அதில், “என் கணவர் என்னை கைவிட்டுவிட்டார்! எல்லா ஆவணங்களையும் எடுத்து கொண்டு போய்விட்டார். எட்டு வருடமாக என்னால் ரேஷன் கார்டை மீட்க முடியவில்லை! கணவனால் கைவிடப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் ரேஷன்கார்டு வாங்குவதில் பெரிய பிரச்சினை இருந்தது. ஏன் என்றால், குடும்பத் தலைவர் என்று அவர் பெயர் இருக்கும். நம்பரும் அவருடையதாக இருக்கும். அவர்களிடமிருந்து ரேஷன்கார்டை மீட்க டைவர்ஸ் வாங்கியிருக்க வேண்டும். டைவர்ஸுக்குக் கோர்ட்டுக்கு அலைவேனா.. என் உடல்நலனை பார்ப்பேனா? ஆனால், என்னிடம் உண்மை இருக்கிறது என்ற நம்பிக்கையோடு அலைந்தேன். அப்போதுதான் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று வந்த ஒரு அரசாணையைப் பற்றிக் கேள்விபட்டேன்.. இந்த மாதிரி பிரச்சினை இருந்தால், விசாரணை நடத்தித் தாசில்தாரே கணவர் பெயரை நீக்கிவிட்டு ரேஷன்கார்டைக் கொடுக்கலாம். அதை வைத்துக்கொண்டு, தாசில்தார் எல்லாவற்றையும் விசாரித்து, ஐந்தே நிமிடத்தில் எனக்கு ரேஷன் கார்டு கொடுத்தாங்க” என்று தழுதழுத்த குரலோடும் கண்ணில் கண்ணீரோடும் அந்த பெண் பேசினார்.

இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நேற்று (15.04.2024) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் குறிப்பிட்டு பேசினார்.

பரப்புரையின் போது தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அந்த பெண் பேசிய தகவல்களை பகிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும் – ஒவ்வொரு அரசாணையும் – ஒவ்வொரு சட்டமும் – கோடிக்கணக்கான மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது! விளிம்பு நிலையில் வாழும் குரலற்றவர்களின் வாழ்க்கையை ஒருபடியாவது முன்னேற்ற உதவுகிறது! என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

பெற்றோர் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் கார்டு வழங்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை குறித்து கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது.

2021-ஆம் ஆண்டு வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கணவனால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், அவரது கணவர் அப்பெண்மணியின் பெயரை நீக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட பெண்மணிக்கு குடும்ப அட்டை வழங்கப்படாத நிலையில், அப்பெண்மணியின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்து, எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement