For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்?"- அமைச்சர் #ThangamThenarasu கேள்வி

02:24 PM Sep 14, 2024 IST | Web Editor
 நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்    அமைச்சர்  thangamthenarasu கேள்வி
Advertisement

நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்? என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொலைநோக்கு பார்வையோடு சென்னையின் எதிர்கால போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் 2 ஆம் வழித்தடத்துக்கு ஏப்ரல் 2017-இல் தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

நாட்டில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 3 வழித்தடங்களுடன் 119 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு விரிவான திட்ட அறிக்கையினை மாநில மற்றும் மத்திய அரசின் 50:50 என்ற சமபங்களிப்பு அடிப்படையில் இரு தரப்பு மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி பெறுவதற்காக ஜனவரி 2019இல் பரிந்துரை செய்யப்பட்டது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகளின் அளவுகோலுக்கான அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் வழித்தடத்தின் திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் வழித்தடத்தை மாநிலத் துறை திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சரியான விவரத்தை அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

2017-ஆம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு மத்திய துறை திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் ஜேஐசிஏ நிறுவனம் 2018-ஆம் ஆண்டு இந்த திட்டத்தினை விரைந்து தொடங்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட திட்ட அறிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்ததால், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், இத்திட்டத்தினை மத்திய அரசின் மத்திய துறை திட்டம் எனும் ஒப்புதலை எதிர்நோக்கி, காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கிலும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு அரசே மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

இந்த வழிமுறையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இத்திட்டம் மத்திய அரசின் 17.8.2021 அன்று நடைபெற்ற பொது முதலீட்டு குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இத்திட்டம் மத்திய துறை திட்டமாக செயல்படுத்த மத்திய அமைச்சரவைக்கு முன்மொழிந்தது என்பதை மத்திய நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.

மத்திய நிதி அமைச்சரை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் மத்திய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் வழித்தட திட்டத்தினை, மத்திய துறை திட்டமாக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதேயாகும். ஒரு ரூபாய் கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை மேலும் மத்திய நிதி அமைச்சர் ரூ.21,000 கோடி வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன்களாக ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ள போதிலும் தமிழ்நாடு அரசு ரூ.5,880 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உண்மையில் இதுவரை இந்த திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் மத்திய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசால் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது மத்திய நிதி அமைச்சர் நாட்டில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது கொச்சி, சென்னை, பெங்களூரூ, நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 5 நகரங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

சென்னைக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை இந்த அறிவிப்புக்கு பின்பு பெங்களூருவுக்கு ரூ. 30,399 கோடி, கொச்சி நகரத்திற்கு ரூ.1957 கோடி, நாக்பூர் நகரத்திற்கு ரூ.6708 கோடி, பூணே நகரத்திற்கு ரூ. 910 கோடி, தாணே நகரத்திற்கு ரூ. 12,200 கோடி மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு மத்திய அரசு மத்திய துறை திட்டம் அடிப்படையிலேயே ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை சென்னைக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் மத்திய அரசு செய்யவில்லை.

மேலும், 2024-25 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மகாராஷ்டிரா, புதுடெல்லி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கெல்லாம் உரிய நிதி மற்றும் சார்நிலைக்கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாடு மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்? நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஏன் மேற்குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது? அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது.

ரூ.7,425 கோடியை மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவே, இந்த ஐயத்தை எல்லாம் போக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைளை ஏற்றும் இந்த திட்டத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதை கருத்தில் கொண்டும் ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ.7,425 கோடியை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்றும், இந்த திட்டத்தை மத்திய துறை திட்டமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் சுமையைக் குறைத்திட வழிவகை செய்திடவும், மத்திய நிதி அமைச்சரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Advertisement